சென்னை,
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது என்பதை தற்போது பார்க்கலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பற்றி பேசும்போதெல்லாம், இந்தியாவின் 36 ரன்கள்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் பெயர் பெற்ற விராட் கோலியின் தலைமையின் கீழ்தான் இந்தியா இந்த மோசமான சாதனையை பதிவு செய்தது.
இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதைவிடவும் குறைந்த ஸ்கோர் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரு அணி வெறும் 26 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. அது ஏதேனும் அறிமுக அல்லது இளம் அணியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. 26 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி சிறிய அணி அல்ல, உலக கிரிக்கெட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் நியூசிலாந்துதான்.
அந்த அணி ஒரு இன்னிங்சில் வெறும் 26 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் குறைந்தபட்ச இன்னிங்ஸ் ஸ்கோராக உள்ளது.
1955-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் விளைவாக நியூசிலாந்து அணி வெறும் 26 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அதுமட்டுமில்லாமல், நியூசிலாந்தின் அந்த இன்னிங்சில் மேலும் ஒரு அதிர்ச்சிகரமான நிகழ்வும் பதிவானது. அந்த அணியின் எந்தவொரு பேட்ஸ்மேனாலும் இரட்டை இலக்க ரன்களை எட்ட முடியவில்லை.
தொடக்க வீரர்கள் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரை அனைவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு இரையானார்கள். பேட்ஸ்மேன்களின் சிறிய பங்களிப்புடன், எக்ஸ்ட்ராஸ் மூலம் கிடைத்த ரன்களும் சேர்ந்தே நியூசிலாந்தின் ஸ்கோர் 26 ரன்களை எட்டியது.
1955-ம் ஆண்டு நியூசிலாந்து பதிவு செய்த இந்த 26 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இன்றளவும் நீடித்து வருகிறது.