புதுடெல்லி,
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படதற்கு எதிராக ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி குரல் கொடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். பேரணியை தடுக்க முயன்ற டெல்லி போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த சம்பவத்தில் பல மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும், 6 வயது சிறுவன் ஒருவரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள நிலையில், பிரபல விளையாட்டு தொகுப்பாளரும், இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "கண்ணீர் புகையால் குழந்தைகள் மூச்சுத் திணறுவதை ஜனநாயகத்தில் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. மக்களை பாதுகாக்க வேண்டியவர்களையே பார்த்து குடிமக்கள் அஞ்ச வேண்டிய நிலை ஏற்படக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சஞ்சனா கணேசனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.