மும்பை,
ஐபிஎல் 2026 சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டிகளுக்குப் பிறகு, பிளே-ஆப் ரேஸில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று நடந்த 2 ஆட்டங்களுக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் அதிகாரபூர்வமாக பிளே-ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் தோற்றது மும்பை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் சென்னை அணியிடம் தோற்றதால் லக்னோவின் கனவும் கலைந்தது.
இப்போது 10 அணிகளுக்கு இடையிலான போட்டி, 8 அணிகளுக்கு இடையிலான போராக மாறியுள்ளது. பெங்களூரு, ஐதராபாத், குஜராத் அணிகள் தலா 7 வெற்றிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இந்த அணிகள் மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் பிளே-ஆப் உறுதியாகிவிடும். பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்தில் உள்ளது. இது மீதமுள்ள 4 போட்டிகளில் 2-ல் வென்றால் எளிதாக தகுதி பெறலாம்.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 5 மற்றும் 6-வது இடங்களில் உள்ளன. மீதமுள்ள 3 போட்டிகளில் குறைந்தது 2-ல் வென்று 16 புள்ளிகளைப் பெற வேண்டும். மற்ற அணிகளின் தோல்வியும் இவர்களுக்குத் தேவை. டெல்லி மற்றும் கொல்கத்தா 7 , 8 -வது இடங்களில் உள்ளன. இந்த அணிகள் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெல்வதோடு, மற்ற அணிகளின் முடிவுகளுக்காகவும் காத்திருக்க வேண்டும்.
மும்பை, லக்னோ அணிகள் பிளே-ஆப் போட்டியிலிருந்து விலகியிருந்தாலும், மற்ற அணிகளின் கனவை சிதைக்கும் ‘ஸ்பாய்லர்’ அணிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதனால் இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டிக்கு நிகரான இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.