ஹராரே,
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ந் தேதி) பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா - ஜிம்பாப்வே மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஹராரேயில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் மயங்க் யாதவ் தலா 2 விக்கெட், சிவம் துபே, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்த நிலையில், ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா கூறியதாவது,
இந்த ஆடுகளம் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். காலையில் இருந்த ஈரப்பதம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது இவ்வளவு நேரம் நீடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. புதிய பந்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது.துரதிர்ஷ்டவசமாக, தொடக்கத்தில் நாங்கள் அதிக பவுண்டரிகள் அடிக்கவில்லை. அதனால் பந்து நீண்ட நேரம் புதியதாகவே இருந்தது. அதன் காரணமாக பிச்சில் இருந்து கிடைத்த நகர்வு பேட்டிங்கை மேலும் சவாலாக்கியது.அடுத்த போட்டியில் இன்னும் சிறந்த ஆடுகளம் கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படியானால் டாஸ் தோற்றாலும் அதன் தாக்கம் போட்டியில் அதிகமாக இருக்காது.என தெரிவித்துள்ளார்.