டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வீழ்த்தியது.
10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 4-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பி.சச்சின் 77 ரன்களும் (42 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் கண்ணன் 32 ரன்களும், கேப்டன் ஷாருக்கான் 27 ரன்களும் விளாசினர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சேலம் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், களம் இறங்கிய சேலம் அணி, வேகப்பந்து வீச்சாளர் தீபன் லிங்கேசின் முதல் ஓவரிலேயே கவின் (0), கேப்டன் அபிஷேக் (0) விக்கெட்டுகளை இழந்தது . ஹரி நிஷாந்தையும் (4 ரன்) அவரே காலி செய்தார். இந்த வீழ்ச்சியில் இருந்து சேலம் அணியால் மீள முடியவில்லை. நிதிஷ் ராஜகோபால் (69 ரன், 52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்),முகமது (30 ரன்) ஆகியோரது அதிரடி தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே கைகொடுத்தது. அந்த அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் கோவை 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபன் லிங்கேஷ், கிஷோர் தலா 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.