கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேலம் அணிக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை

முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல்,

10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராம் குமார் - சித்தார்த் மகாதேவன் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் ராம் குமார் 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சித்தார்த் மகாதேவன் 60 ரன்களில் போல்ட் ஆனார். கேப்டன் பால்சந்தர் அனிருத் 7 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இது தவிர அதிகபட்சமாக அதீக் அர் ரகுமான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி விளையாடி வருகிறது.