கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்திய நெல்லை ராயல் கிங்ஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி தொடர்ந்து பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

10-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை தோற்கடித்தது.

டிஎன்பிஎல்

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதியது.

டாஸ்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அரைசதம் விளாசிய விமல் குமார்

தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெயந்த் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஹன்னி சய்லி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹன்னி சய்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், கார்த்தி சரண் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விமல் குமார் அரைசதம் விளாசி, 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

நெல்லைக்கு 171 ரன்கள் இலக்கு

இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்கியது.

6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ்

விமல்குமார் 63 ரன்களும் (45 பந்து, 5 பவுண்டரி, 3 சிக் சர்), அனுராக் 35 ரன்களும் விளாசினர். வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் களம் கண்ட நெல்லை அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. சந்தோஷ்குமார் (44 ரன், 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஜி.அஜிதேஷ் (46 ரன்), முகிலேஷ் (43 ரன்), கேப்டன் சோனு யாதவ் (19 ரன், 6 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) வெற்றி வாய்ப்பை எளிதாக்கினர். நெல்லை அணி தொடர்ந்து பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 2-வது லீக்கில் ஆடிய திண்டுக்கல்லுக்கு இது முதலாவது தோல்வியாகும்.