கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருச்சி வெற்றி

திருச்சி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஈஸ்வரன் 4 விக்கெட்டும், அந்தோணிதாஸ் 3 விக்கெட்டும் கபளீகரம் செய்தனர்.

சென்னை,

8 அணிகள் இடையிலான 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை சேப் பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. 'டாஸ்' ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் பாபா இந்திரஜித் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி கே.ராஜ்குமாரும். கேப்டன் சுரேஷ்குமாரும் திருச்சியின் இன்னிங்சை பவுண்டரியுடன் தொடங்கினர். 3 ஓவர் முடிந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் 40 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 19 ஓவர் கொண்டதாக மாற்றப்பட்டது. தொடர்ந்து அதிரடி காட்டிய தொடக்க ஜோடியினர் இருவரும் அரைசதத்தை எட்டினர்.

ஸ்கோர் 118-ஆக உயர்ந்த போது சுரேஷ்குமார் 60 ரன்னில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் கே.ராஜ்குமார் 71 ரன்கள் (42 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கினார். சஞ்சய் யாதவ் (33 ரன்), ஜாபர் ஜமாலும் (21 ரன்) இரட்டை இலக்கம் பங்களிப்பை அளித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர் முடிவில் திருச்சி அணி 4 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் முதல்முறையாக களம் கண்ட திண்டுக்கல் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் பந்து வீசி 34 ரன் விட்டுக் கொடுத்தார். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை.

பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணியால் 19 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 170 ரன்களே எடுக்க முடிந்தது. ஷிவம் சிங் (47 ரன்), கேப்டன் பாபா இந்திரஜித் (32 ரன்), ஜெயந்த் (34 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.

28 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணி தனது 4-வது வெற்றியை பெற்றதுடன், பிளே-ஆப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது. திருச்சி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஈஸ் வரன் 4 விக்கெட்டும், அந்தோணிதாஸ் 3 விக்கெட்டும் கபளீகரம் செய்தனர். 6-வது லீக்கில் ஆடி 4-வது தோல்வியை தழுவிய திண்டுக்கல் ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.