சென்னை
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
8 அணிகள் இடையிலான 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதன் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நடந்தன. இறுதி கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன.
லீக் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.
திருச்சிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்று மழையால் ரத்தானதால் புள்ளி பட்டியல் முன்னிலை அடிப்படையில் மதுரை அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று மழையால் கைவிடப்பட்டதால் கோவை அணி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. 2-வது தகுதி சுற்றில் கோவை அணி 84 ரன் வித்தியாசத்தில் திருச்சியை துவம்சம் செய்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.
முன்னாள் சாம்பியனான மதுரை அணி லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2 முறை சாம்பியனான கோவை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 3-வது இடம் பெற்றது.
இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6-ல் கோவையும். 5-ல் மதுரையும் வென்றுள்ளன. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் அனிருத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ், ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் தமிழ் 4 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.