சென்னை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தொடங்கியது. அங்கு முதல் கட்ட 20 லீக் ஆட்டங்கள் நடந்தன. இதையடுத்து, இறுதிப்போட்டி உள்பட 2-வது கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
அதன்படி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் விரைவாக சரிந்தாலும், ராம் அரவிந்த் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவர் வெறும் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார். தினேஷ் ராஜ் 18 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் கோவை கிங்ஸ் அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது.
தொடக்கம் முதல் கோவை அணி அதிரடியாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய ராதாகிருஷ்ணன் 38 ரன்களும், லோகேஸ்வர் 40 ரன்களும் எடுத்தனர். இதனால் 18.5 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் கோவை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.