சென்னை,
இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் திருப்பூரை வீழ்த்தி சேலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர் துஷார் ரஹேஜா அற்புதமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தனி ஆளாக போராடிய துஷார் ரஹேஜா 75(43) ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேலம் அணி இந்த தொடரில் பெறும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.