நத்தம்,
10-வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு 171 ரன்கள் என்ற வெற்றி இலக்கை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெயந்த் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய விமல் குமார் மற்றும் ஹன்னி சய்லி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹன்னி சய்லி 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பாபா இந்திரஜித் 9 ரன்களிலும், கார்த்தி சரண் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
ஒரு முனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விமல் குமார் அரைசதம் விளாசி, 63 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.