கிறைஸ்ட்சர்ச்,
டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பிரண்டன் மெக்கல்லத்தை பின்னுக்குத் தள்ளி, டாம் லாதம் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதல் இன்னிங்சில் 128 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவரது மொத்த ரன்கள் 6,509 ஆக உயர்ந்தது. இதற்கு முன்பு பிரண்டன் மெக்கல்லம் 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ரன்கள் எடுத்திருந்தார். அவரை முந்தி லாதம் தற்போது 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லாதம், 38.74 சராசரியுடன் 17 சதங்கள், 32 அரைசதங்கள் அடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் 9,515 ரன்களுடன் முதலிடத்திலும், ராஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஸ்டீபன் பிளெமிங் 7,172 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டாம் லாதம் 59 ரன்களும், டெவன் கான்வே 31 ரன்களும் எடுத்தனர்.
டாம் பிளண்டல் 53 ரன்களுடனும், கிளென் பிலிப்ஸ் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அறிமுக வீரர் குர்னூர் பிரார், அன்ஷுல் கம்போஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.