ஷார்ஜா,
முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இத்தொடரின் லீக் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
அந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டின் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 43.3 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 68 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்த அணியின் ரஷித் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில் ரஹ்மானுல்லா 36 ரன்களில் அட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த செதிக்குல்லா அடல் 6 ரன்களில் கேட்ச் ஆனார். இதையடுத்து கேப்டன் ரஹ்தான் ஷாவுடன் இப்ராஹிம் சத்ரான் ஜோடி சேர்ந்தார்.
அரைசதம் நோக்கி முன்னேறிய ரஹ்மத் ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்ராஹிம் சத்ரான் 70 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியாக 34.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.