கொழும்பு,
2027-ம் ஆண்டு ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு குசால் மெண்டிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்காவும் 16 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது பயணம் மருத்துவப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்தே அமையும்.
அவர் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே அணியுடன் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தொடக்க மற்றும் டாப்-ஆர்டர் வரிசையில் அவிஷ்கா பெர்னாண்டோ, கமில் மிஷாரா, பவன் ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மிடில்-ஆர்டரில் சஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
முன்னாள் கேப்டன் தசுன் ஷானகா மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் துனித் வெல்லாலகே ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சு பிரிவில் மகீஷ் தீக்சனா மற்றும் சச்சிந்து கொலம்பகே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் துஷ்மந்த சமீரா, அசிதா பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்கா, ஈஷான் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்ததும், இலங்கை அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அக்டோபர் 18-ம் தேதி தொடங்குகிறது.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், இந்தத் தொடர் இலங்கை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
குசால் மெண்டிஸ் (கேப்டன்), சஹான் ஆராச்சிகே, துஷ்மந்த சமீரா, சச்சிந்து கொலம்பகே, அவிஷ்கா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ, ஜனித் லியனகே, டில்ஷான் மதுஷங்கா, ஈஷான் மலிங்கா, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷாரா, பதும் நிஸ்ஸங்கா, பவன் ரத்நாயக்க, தசுன் ஷானகா, மகீஷ் தீக்சனா, துனித் வெல்லாலகே.