மும்பை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் சண்டிகர் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை 2026-27 சீசனின் எலைட் பிரிவு ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் இரண்டாவது நாளில் சண்டிகர் அணிக்கு எதிராக பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே, 11-வது ஓவரின் 3-வது பந்தில் அர்ஜுன் ஆசாத்தை ஆட்டமிழக்க செய்தார். அடுத்த பந்திலேயே சிவம் பாம்பரியை ரன் ஏதும் எடுக்கவிடாமல் வெளியேற்றினார்.
தொடர்ந்து 5-வது பந்தில் தீபேந்தர் குஷின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் ஹாட்ரிக் சாதனையை படைத்தார் தேஷ்பாண்டே.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ஜஹாங்கீர் கோட். அவர் 1943-44 சீசனில் இந்த சாதனையைப் படைத்தார்.
அதன்பிறகு உமேஷ் குல்கர்னி (1963-64), அப்துல் இஸ்மாயில் (1973-74), ராய்சன் டயாஸ் (2023-24), ஷர்துல் தாகூர் (2024-25) ஆகியோர் மும்பை அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
தற்போது துஷார் தேஷ்பாண்டே இந்த பட்டியலில் இணைந்துள்ளார். இதன் மூலம் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த 6-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.