கிரிக்கெட்

யு19 உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

புலவாயோ,

16-வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்)

ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று அரையிறுதிப் போட்டி புலவாயோவில் நடைபெற்றது.

இதில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாள் போடப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் மஹூப் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய காலித் அஹ்மத்சாய் 31 ரன்களுக்கும், ஒஸ்மான் சதாத் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் பைசல் ஷினோசாத், உசருல்லாஹ் நியசாய் இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். நிலைத்து விளையாடிய பைசல் ஷினோசாத், உசருல்லாஹ் நியசாய் இருவரும் சதமடித்து அசத்தினர்.இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 310 ரன்கள் குவித்தது.

பின்னர் 311 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் களம் இறங்கியது.ஆரோன் ஜார்ஜ்- வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார். அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். இவர் 59 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 பந்தில் 115 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.இறுதிப் போட்டியில் வருகிற 6-ந்தேதி இங்கிலாந்தை இந்திய அணி எதிர்கொள்கிறது.