ஹராரே,
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இதில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் களமிறங்கினர். தொடக்கத்தில் ஆரோன் ஜார்ஜ் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினார்.ஆயுஷ் மாத்ரே நிலைத்து விளையாடினார். அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடினார். பந்துகளை, பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.தொடர்ந்து வான வேடிக்கை காட்டிய வைபவ் சூர்யவன்ஷி (15 பவுண்டரி, 15 சிக்ஸர் )80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். வேதாந்த் திரிவேதி 32 ரன்களும், விஹான் மல்ஹோத்ரா 30 ரன்களும் அபிக்யான் 40 ரன்களும் கனிஷ்க் சவுகான் 37 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 411ரன்கள் எடுத்தது.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 56 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். பென் மேய்ஸ் 28 பந்தில் 45 ரன்கள் விளாசினார்.
அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தாலும் கலெப் பால்கனர் அபாரமாக விளையாடி 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 6-வது முறையாக யு19 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது