துபாய்,
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்காக ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு 15 மாதங்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐசிசி தடை விதித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி, நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின்போது ஆசிப் கானின் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதில் ‘மெஸ்டெரோலோன்’ எனப்படும் அனபோலிக் ஸ்டீராய்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு 15 மாதங்கள் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. டிசம்பர் 8 முதலே அவரால் மீண்டும் சர்வதேச அல்லது உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியும்.
பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் கான், 2007 முதல் 2014 வரை அந்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். பின்னர் 2017-ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்தார்.
2022-ம் ஆண்டு யுஏஇ அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆசிப் கான், இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் 1,270 ரன்களும், 56 டி20 போட்டிகளில் 1,302 ரன்களும் எடுத்துள்ளார்.