கிரிக்கெட்

நாதன் லயன் அதிரடி நீக்கம் - நியூசிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 புதுமுகங்கள்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 9-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

சிட்னி,

நியூசிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 13 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக ஜாக் கிளேட்டன், கோரி ரோக்கிச்சியோலி ஆகிய இருவருக்கும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் மற்றும் பேட்டர் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அணியில் இடம்பிடித்த கிளேட்டன்

குயின்ஸ்லாந்து அணியின் இடக்கை பேட்டரான ஜாக் கிளேட்டன், நடப்பு ஷெபீல்டு ஷீல்டு சீசனில் 5 போட்டிகளில் 74.83 சராசரியில் ரன்கள் குவித்துள்ளார். அவரது சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. மார்னஸ் லபுஷேனுக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாதன் லயனுக்கு இடமில்லை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 577 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நாதன் லயன் அணியில் சேர்க்கப்படாதது கவனம் பெற்றுள்ளது. 2013-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் முதன்மை டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்த அவர், 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு முதல்முறையாக அணித் தேர்வில் இடம்பெறவில்லை.

அவருக்குப் பதிலாக ஆப்-ஸ்பின்னர் கோரி ரோக்கிச்சியோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 29.66 சராசரியில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், ஷெபீல்டு ஷீல்டு தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் டாஸ்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் முதல்தர சதத்தையும் பதிவு செய்தார்.

இந்த13 பேர் கொண்ட அணியில், டிசம்பர் 3 முதல் 7 வரை நடைபெறும் ஷெபீல்டு ஷீல்டு தொடரின் 6-வது சுற்று ஆட்டங்களுக்கு பிறகு மேலும் ஒரு வீரர் சேர்க்கப்பட உள்ளார்.

டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 9-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. தொடர்ந்து அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற உள்ளன. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து விளையாடும் முதல் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இதுவாகும்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜாக் கிளேட்டன், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, கோரி ரோக்கிச்சியோலி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

SCROLL FOR NEXT