அகமதாபாத்,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் உர்வில் படேல் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி முதல் இன்னிங்சில் 500 ரன்களை கடந்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது உர்வில் படேல் 63 ரன்களுடனும், விஷால் ஜெய்ஸ்வால் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உர்வில் படேல், முதலில் சதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக ரன்களைக் குவித்த அவர், தனது சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார்.
அவரது சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் குஜராத் அணி 500 ரன்களைக் கடந்தது. பின்னர் 533/8 ரன்கள் எடுத்து வலுவானநிலையில் குஜராத் அணி டிக்ளேர் செய்தது. உர்வில் படேல் 210 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து தற்போது கேரளா அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.