கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சாண்ட் பேப்பர்: மொத்த அணிக்கும் பங்கு - ஆஸி. வீரர் கவாஜா

அணியின் பயிற்சியாளர் டேரன் லெஹ்மன் பதவியை ராஜினாமா செய்தார்.

கென்பரா,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சாண்ட் பேப்பரை பயன்படுத்தியது மொத்த அணிக்கும் தெரியும், இந்த விவகாரத்தில் மொத்த அணிக்கு பங்கு உண்டு என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

சாண்ட் பேப்பர் விவகாரம்

2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் சாண்ட் பேப்பரை (உப்புத்தாள்) பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தினர். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல், டேவிட் வார்னர் 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர் வருங்காலங்களில் கேட்பன் பொறுப்பு ஏற்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர், அந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதேபோல், பந்து வீச்சாளர் கேமரூன் பெங்கிராப்ட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அணியின் பயிற்சியாளர் டேரன் லெஹ்மன் பதவியை ராஜினாமா செய்தார். அதேவேளை, சாண்ட் பேப்பரை பயன்படுத்தியது தங்களுக்கு தெரியாது என்று பிற ஆஸ்திரேலிய வீரர்கள் கூறி வந்தனர்.

மொத்த அணிக்கும் தெரியும்..!

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் சாண்ட் பேப்பரை பயன்படுத்தியது மொத்த அணிக்கும் தெரியும், இந்த விவகாரத்தில் மொத்த அணிக்கு பங்கு உண்டு என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

தனது சுய சரிதை புத்தகம் தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற கவாஜா கூறுகையில்,

சாண்ட் பேப்பரை பயன்படுத்தியது ஆஸ்திரேலிய அணியினர் அனைவருக்கும் தெரியும். பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள், பயிற்சியாளர்கள் என அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்த உண்மையை 8 ஆண்டுகள் கழித்து நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த உண்மையை டேவிட் வார்னர் அல்லது வேறு யாராவது வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்த்தேன். 3வது டெஸ்ட்டில் மட்டுமல்ல அதற்கு முந்தைய 2வது டெஸ்ட்டிலும் சாண்ட் பேப்பரை பயன்படுத்தினோம். இந்த விவகாரத்தில் டேவிட் வார்னர் உள்பட 3 வீரர்கள் சிக்கிக்கொண்டனர். கிரிக்கெட்டை தாண்டி வாழ்க்கை உள்ளது. இந்த வீரர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT