தோஹா,
ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிராக அதிரடியாக 204 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஆர்யான்ஷ் சர்மா 2 ரன்களிலும், அன்ஷ் டாண்டன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஹர்பிரீத் சிங் பாட்டியா சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 144 பந்துகளில் 130 ரன்கள் எடுத்தார். முகமது ஷஹ்தாத் 28 ரன்களும், ஈதன் டி'சோசா 25 ரன்களும் சேர்த்தனர்.இதனால் யுஏஇ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
250 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூரியவன்ஷி அதிரடியான தொடக்கத்தை அளித்தார். வெறும் 28 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் இரட்டை சதத்தையும் நிறைவு செய்தார். இறுதியில் 53 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்
வைபவ் சூரியவன்ஷியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆட்டத்தால் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம், அதிவேக இரட்டைச் சதம் என ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகளைப் படைத்து வைபவ் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்திய ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா கூறுகையில்,
'சூர்யவன்ஷியின் இன்னிங்சை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது முற்றிலும் ஒரு ருத்ரதாண்டவம் என்று மட்டுமே சொல்வேன். அவர் விளையாடிய விதத்தை பார்த்தால் முதல் 5 ஓவர்களிலேயே ஆட்டம் முடிந்து விட்டது என்று நினைக்கிறேன். 5 ஓவர்களில் நாங்கள் 100 ரன்கள் எடுத்திருந்தோம். அதன் பிறகும் அவர் பேட் செய்த விதம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. அவர் நிறைய சிக்சர் அடிக்கக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த போது, வீரர்கள் பகுதியில் அமர்ந்திருந்த நாங்கள் இன்னும் அடி... இன்னும் அடி என உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தோம். பந்து பவுண்டரிக்கு சென்ற போது கூட அதை யாரும் பார்க்கவில்லை. சிக்சர் அடித்தாரா. பந்து சிக்சருக்கு சென்றதா என்று தான் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் பார்த்தமட்டில் மிகச்சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று' என்றார்.
குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற மகத்தான சிறப்பை பெற்ற பீகாரைச் சேர்ந்த 15 வயதான சூர்யவன்ஷி கூறு கையில், 'முந்தைய இரு ஆட்டங்களில் வலுவாக காலூன்றிய பிறகு ஆட்டமிழந்து விட்டேன். இந்த முறை களத்திற்கு சென்று ஓரிரு பந்துகளை சந்தித்த பிறகு ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால் எனது பலம் மீது நம்பிக்கை வைத்து விளையாடினேன். முடிந்த வரை நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது திட்ட மாக இருந்தது. மற்றபடி பந்து பேட்டுக்கு ஏதுவாக வந்ததால் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். எஞ்சிய ஆட்டங் களிலும் இத்தகைய அணுகுமுறையை தொடர முயற்சிப்பேன். அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறு வோம் என்று நம்புகிறேன்' என்றார்.