கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷி ஒரு அசாத்தியமான திறமைசாலி: லாக்கி பெர்குசன் பாராட்டு

இந்திய அணியில் அவர் இடம்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 15 வயது இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியை, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாகப் பேசிய பெர்குசன், சூர்யவன்ஷி அபாரமான திறமை கொண்ட வீரர் என்றும், இந்திய அணியில் அவர் இடம்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட பெர்குசன்

ஐபிஎல் தொடரில் சூர்யவன்ஷிக்கு எதிராகப் பந்துவீசிய அனுபவம் தனக்கு இருக்கிறது. அவரது திறமை ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது இயல்பான ஒன்றுதான்.

சூர்யவன்ஷிக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் பந்துவீசுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அது சவாலான அனுபவமாக இருக்கும் என்றும் பெர்குசன் குறிப்பிட்டார்.

நியூசிலாந்து ஆடுகளங்கள் புதிய சவாலாக இருக்கும்!

இந்தியாவில் விளையாடுவதற்கும் நியூசிலாந்தில் விளையாடுவதற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கிறது.நியூசிலாந்தில் ஆடுகளங்களின் தன்மை, பந்தின் ஸ்விங், பவுன்ஸ் மற்றும் மைதானங்களின் எல்லை அளவுகள் ஆகியவை பேட்ஸ்மேன்களுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தும்.

குறிப்பாக, சிறிய எல்லைகளைக் கொண்ட ஈடன் பார்க் மைதானம் முதல் பெரிய எல்லைகளைக் கொண்ட மைதானங்கள் வரை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப வீரர்கள் தங்களைத் தயார்படுத்த வேண்டியிருக்கும். என தெரிவித்தார்.

இந்தியா – நியூசிலாந்து தொடர் எப்போது?

இந்திய அணி அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன.ஏற்கெனவே சர்வதேச டி20 போட்டிகளில் தனது அதிரடி பேட்டிங்கால் கவனம் ஈர்த்துள்ள சூர்யவன்ஷிக்கு, நியூசிலாந்து மண்ணில் விளையாடுவது தனது திறமையை மேலும் நிரூபிப்பதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும்.

SCROLL FOR NEXT