ஐதராபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்செய்தது.
தொடக்கம் முதல் ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடியது. ஹெட் 37 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அபிஷேக் சர்மா டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர்களை பறக்க விட்டார். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 135 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 25 ரன்களும், கிளாசன் 37 ரன்களும் எடுத்தனர். இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது.
பின்னர் மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி வீரர்கள் முடிந்த வரை வேகமாக அடித்து ஆடினர். ஆனால் சீரான இடைவெளியில் விக் கெட்டுகளும் விழுந்ததால் முன்னேறி செல்ல முடியவில்லை. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணியால் 9 விக்கெட்டுக்கு 195 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 47 ரன் வித்தி யாசத்தில் 4-வது வெற்றியை பெற்றது.
வெற்றி தொடர்பாக பேசிய ஐதராபாத் கேப்டன் இஷான் கிஷன் கூறியதாவது,
அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடினார். கிளாசனும் அதிரடியாக விளையாடினார். எங்கள் அணியில் உள்ள அனைவருக்கும் அதிரடியாக ஆடப் பிடிக்கும். எனவே, விக்கெட் எப்படிச் செயல்படப் போகிறது, என்ன மாதிரியான பவுன்ஸ் இருக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு 2-3 பந்துகள் அவகாசம் கொடுக்க வேண்டும், பிறகு நாங்கள் எங்கள் ஆட்டத்தை ஆடுவோம். நாங்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்குப் பின்னால் எங்களிடம் எந்தத் திட்டமும் இல்லை, ஆனால் நாங்கள் பந்தைக் கவனித்து எங்கள் ஆட்டத்தை ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். என தெரிவித்தார்