சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நியூ சண்டிகாரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் ஐதராபாத் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா அரைசதம் அடித்தார். டிராவிஸ் ஹெட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபிஷேக் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 27 ரன்களும் , கிளாசன் 39 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 220 எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் பிரியான்ஷ் ஆர்யா 57 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கூப்பர் கொன்னொலியும் 11 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் - வதேரா ஜோடி சேர்ந்தனர். இதில், ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வதேரா 14 ரன்களில் அவுட்டாக ஷஷாங் சிங் களமிறங்கினார். இறுதியில் 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 69 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், வெற்றி தொடர்பாக பேசிய பஞ்சாப் கேப்டன் ஷ்ரயாஸ் அய்யர் கூறியதாவது,
எங்களுக்கு ஒரு அற்புதமான தொடக்கம் கிடைத்தது. 220 ரன்களை நோக்கி விளையாடும்போது , இதுபோன்ற தொடக்கங்கள் அவசியம். அவர்கள் பவர்பிளேயை எப்படி விளையாட வேண்டும் என்று காட்டிய விதம், பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அவை சரியான கிரிக்கெட் ஷாட்கள். அவர்கள் தொடக்கத்தில் ஆட்டத்தின் வேகத்தைச் சீராக்கினார்கள். ஆனால் அந்த வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வது அவசியம். விக்கெட்டின் வேகத்தை நான் கணித்தவுடன், அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நினைத்தேன்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நாங்கள் அற்புதமாகச் செயல்பட்டிருக்கிறோம் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். எல்லா வீரர்களும் ஒன்றாக வந்து, பயிற்சி செய்து, கடுமையாக உழைத்தார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த உழைப்பின் பலனை களத்தில் காண முடிகிறது. என தெரிவித்தார்.