சென்னை,
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6-வது முறையாக யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதனையடுத்து கோப்பை வென்ற இந்திய அணிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், விராட் கோலி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற U19 இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். இளையோர் கிரிக்கெட் முதல் அதற்கு அப்பாலும் நமது ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.