மும்பை,
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா, ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறிய தாவது;
போட்டியில் கேட்சுகளை தவறவிடுவது கவலை அளிக்கிறது. வெளிப்படையாக யாரும் வேண்டுமென்றே கேட்சுகளை தவறவிடுவது கிடையாது. பீல்டிங்கில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். வீரர்கள் பயிற்சியின் போது கடினமாக உழைத்து வருகிறார்கள்.வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான முறையில் பந்து வீசி வருகிறார். அதில் விக்கெட் எடுக்கும் திறனை பெற்று முன்னேறி வருகிறார்.
சஞ்சு சாம்சன் ஒரு தரமான பேட்ஸ்மேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை அனுபவம் மூலம் சிறப்பாக கையாண்டார். அவர் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடுமையான பயிற்சியை மேற்கொள்வார். கடினமான காலக்கட்டத்தில் அமைதியாக இருந்து போராடிய அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.