மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி நிர்ணயித்த 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களில் விரட்டிப் பிடித்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு மங்கியுள்ளது. இந்த நிலையில், தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது;
”எங்களது பேட்டிங், முந்தைய ஆட்டங்களை விட மேம்பட்டுள்ளது. இன்று மைதானத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். எங்களது பந்துவீச்சாளர்கள் 244 ரன்கள் இலக்கை கட்டுப்படுத்துவார்கள் என்று நம்பினேன். ஆனால் இன்று எங்களால் அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை. பனி ஆட்டத்தில் ஒரு பெரிய பங்கு வகித்ததாக நான் நினைக்கவில்லை.
சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. எங்களது வீரர்கள் முடிந்தவரையில் முயற்சி செய்தனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த சீசனில் எங்களுக்கு இனி அதிக வாய்ப்புகள் இல்லை என்று நினைக்கிறேன். எங்களால் என்னென்ன மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.