வெல்லிங்டன்,
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஆட்டம் முடிவதற்கு 15 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் இந்திய அணி டிராவுக்கு ஒப்புக்கொண்ட முடிவை முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணியின் அணுகுமுறையையும், சுப்மன் கில் தலைமையிலான தற்போதைய அணியின் அணுகுமுறையையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் இருந்து இந்திய அணி ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இந்தப் போட்டி டிராவில் முடிந்திருக்கலாம். வேறு கேப்டன் அல்லது பந்துவீச்சாளர் இருந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால், ஆட்டத்தில் வேகமும் வெற்றி பெறுவதற்கான முனைப்பும் மிகவும் முக்கியம்" என்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கிலேயே டிராவுக்கு ஒப்புக்கொண்டதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், இந்தக் காரணத்தை அஸ்வின் ஏற்கவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் கடினமான சூழல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், பும்ரா நீண்ட நேரம் பந்துவீசியிருந்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டிருக்க வேண்டும் என்றார்.
மேலும், "பும்ராவுக்கு கூடுதல் சுமை கொடுக்கக் கூடாது என்று நினைத்தால், சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கலாம். இந்தப் போட்டியில் நாம் ஆதிக்கம் செலுத்தினோம். ஆனால், நியூசிலாந்தை முழுமையாக வீழ்த்தவில்லை. ஆதிக்கம் செலுத்தியதற்காக யாரும் புள்ளிகள் வழங்க மாட்டார்கள். வெற்றி பெற்றால்தான் புள்ளிகள் கிடைக்கும்.
நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள் என்று பலரும் பாராட்டலாம். ஆனால், 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை என்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை. குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை இவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாக்கிய பிறகு, வெற்றியை நோக்கிப் போராடியிருக்க வேண்டும். ஆனால், நாமே பின்வாங்கியது ஏமாற்றமளிக்கிறது" என்று அஸ்வின் தெரிவித்தார்.
இந்தப் போட்டி டிராவில் முடிந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் வாய்ப்பும் சற்று சிக்கலாகியுள்ளது.