இந்தூர்,
இந்தூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி யில் அபிஷேக் ஷர்மா (69 ரன், 6 பவுண்டரி, 5 சிக்சர்) இஷான் கிஷனின் (37 ரன், 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சரவெடியான பேட்டிங் ஜாலத்தால் இந்தியா நிர்ணயித்த 224 ரன் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியா 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
தோல்விக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் கூறுகையில், 'உண்மையை சொல்வது என்றால், என்னென்ன தவறு கள் நடந்தன என்பதை சுட்டிக்காட்ட நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் சில நேரங்களில் வெற்றி, தோல்வியை சிறிய வித்தியாசங்களே தீர்மானிக்கும். அப்படிப்பட்ட ஒரு போட்டியாக இது அமைந்தது. பந்து வீச்சில் இன்னும் சற்று சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஆடுகளத்தன்மையை இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். இதே போல் தொடக்க ஒவர்களில் தேவையில்லாமல் சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தோம். இறுதியில் இத்தகைய விஷயங்களே முடிவை தீர்மானிக்கும் காரணியாக அமைகின்றன.
அபிஷேக் ஷர்மா- இஷான் கிஷனின் ஆபத்தான கூட்டணியை, சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் மூலம் உடைத்து மீண்டும் ஆட்டத்திற்குள் வந்த விதம் பாராட்டுக்குரியது. இருப்பினும் இலக்கை விரட்டிப்பிடிக்க எங்களுக்கு வலுவான தொடக்க பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அது கிடைக்கவில்லை. அதற்காக ஒன்று, இரண்டு வீரர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பனிப்பொழிவு இல்லாததும் எங்களுக்கு பாதகமாக மாறியது. கடைசி கட்டத்தில் இந்திய பந்துவீச்சா ளர்களின் செயல்பாட்டை பாராட்டியாக வேண்டும். அவர்கள் அற்புதமாக பந்து வீசினர். இறுதி கட்டத்தில் எப்படி மிக துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீச வேண்டும் என்பதை எங்களுக்கு காட்டி விட்டனர். அந்த பெருமை இந்திய பவுலர்களையே சாரும்' என்றார்.