கொல்கத்தா,
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான சூப்பர் 8 சுற்று, இறுதிக் கட்டத்தை எட்டி இருந்தது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்களை சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
இதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோத உள்ளன.
4-ம் தேதி (புதன் கிழமை) கொல்கத்தாவில் நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
5-ம் தேதி (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
அரையிறுதியில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் வரும் 8-ம் தேதி (ஞாயிறு) அகமதாபாத்தில் நடைபெறும் டி20 2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதி ”சாம்பியன்” பட்டத்தை கைப்பற்றும்.