image Courtacy: IPLTwitter 
கிரிக்கெட்

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? - டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதுகின்றன.

தர்மசாலா,

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (18 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (18), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18), ராஜஸ்தான் ராயல்ஸ் (16) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்த நிலையில் புள்ளிபட்டியலில் டாப்-2 இடங்களை பெற்ற அணிகளான நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதுகின்றன.

இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்த ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும்.

இவ்விரு அணிகளும் நடப்பு தொடரில் ஏற்கனவே 2 முறை மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் பதிலடி கொடுத்தது. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.