பெங்களூரு,
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
முதல் 4 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் ரன்வேட்டைக்கு துளியும் பஞ்சமில்லை. 6 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன. அதிலும் ராஞ்சியில் நடந்த 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
தொடரில் 3 சதங்கள், 6 அரைசதங்கள் பதிவாகின. 98 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற இரு நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக சிக்சர்கள் நொறுக்கப்பட்ட தொடராக இது அமைந்துள்ளது. இதே போல் பெங்களூரு போட்டியிலும் ரன்மழையை எதிர்பார்க்கலாம். ஏனெனில் இது சிறிய பவுண்டரி தூரம் கொண்ட மைதானமாகும்.
ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. ஆனால் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் தான் மெச்சும்படி இல்லை. பவுலர்கள் துல்லியமாக பந்து வீச முடியாமல் தடுமாறுவது பாதிப்பை ஏற்படுத்துகிறது. முந்தைய ஆட்டத்தில் பந்து தாக்கி தோள்பட்டையில் காயமடைந்து பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்பில்லை.
இதையடுத்து அணிக்கு மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர்குமார், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக ஆடுவதால் இந்த மைதானத் தன்மையை நன்கு அறிந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் செய்வதால் அவரது பந்துவீச்சு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மற்றபடி பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், திலக் வர்மா மிரட்ட காத்திருக்கிறார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணியும் பேட்டிங்கில் சரிசமமாக கோதாவில் நிற்கிறது. அந்த அணியில் கேப்டன் ஷாய் ஹோப் (2 சதம் உள்பட 261 ரன்), ரூதர்போர்டு (2 அரைசதம் உள்பட 221 ரன்) நிலைத்து நின்று விட்டால் ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார்கள். ஷெப்பர்டு, ஹெட்மயர், ரோஸ்டன் சேஸ், கீமோ பால் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். அதனால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் 2002-ம் ஆண்டுக்கு பிறகு எந்த வடிவிலான போட்டித் தொடரையும் வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதற்கு, வரிந்து கட்டுவதால் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாயப்புள்ளது. பெங்களூருவில் கடந்த இரு நாட்களாக வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன், லேசாக மழையும் பெய்கிறது. இன்று அங்கு மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், நிதிஷ்குமார் ரெட்டி, அக்ஷர் பட்டேல், மயங்க் யாதவ், புவனேஷ்வர்குமார், பிரின்ஸ் யாதவ் அல்லது குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஹெட்மயர், ரோமன் பவெல், ரூதர்போர்டு, ஷெப்பர்டு, ரோஸ்டன் சேஸ், ஷமார் ஸ்பிரிங்கர், கீமோ பால், ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி.