ராய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை. 'பிளே-ஆப்' வாய்ப்பை பெற 8 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (ஐதராபாத், சென்னை, லக்னோ. குஜராத், டெல்லி மற்றும் 2 முறை மும்பை அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (ராஜஸ்தான், டெல்லி, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் மும்பையை மீண்டும் வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.
கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ராஜஸ்தான், லக்னோ, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக). ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிராக) 5 தோல்வி (மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, குஜராத் அணிகளுக்கு எதிராக) கண்டு 9 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 6 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டு எழுச்சி கண்டுள்ளது. அந்த நான்கு ஆட்டங்களிலும் எதிரணியை 165 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி அசத்தி இருக்கிறது.
பிளே-ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்த பெங்களூரு அணியும், தனது எழுச்சியை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் கொல்கத்தாவும், 15-ல் பெங்களூருவும் வென்றுள்ளன.
பெங்களூரு:
ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, குருணல் பாண்ட்யா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது ஜேக்கப் டப்பி, ராசிக் சலாம், புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.
கொல்கத்தா:
பின் ஆலென், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரிங்கு சிங், மனிஷ் பாண்டே, ரோமன் பவெல், சுனில் நரின், அனுகுல் ராய், கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா, பிரசாந்த் சோலங்கி அல்லது தக்ஷ் கம்ரா.