கிரிக்கெட்

கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் தோனி? சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், தோனியும் போட்டியில் களமிறங்க இருப்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் வீரரான தோனி காயம் காரணமாக நடப்பு சீசனில் ஒரு போட்டியிலும் கூட விளையாடவில்லை. தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் அவரது ரசிகர்கள் பலரும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்ட தோனி, கடைசியாக நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியிலேயே களமிறங்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அன்றைய போட்டியில் விளையாடவில்லை. இது சென்னை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், கொல்கத்தாவிற்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் தோனி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர் தோல்வியால் திணறி வந்த சென்னை அணி, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள நிலையில் தோனியும் களமிறங்க இருப்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் கொல்கத்தாவும் சென்னை அணியும் கடைசி 2 இடங்களில் உள்ளன.