கிரிக்கெட்

அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா? வெஸ்ட்இண்டீசுடன் நாளை மோதல்

இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கொல்கத்தா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஜிம்பாப்வே 2 தோல்வியுடன் வெளியேறியது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (மார்ச் 1) இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரை இறுதிக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தோற்றால் வெளியேறிவிடும். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும். ஒருவேளை இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனென்றால் வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின் தங்கியுள்ளது. இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேற ஆர்வம் காட்டும் என்பதால், நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது