கோப்புப்படம் 
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா இந்தியா? நாளை பலப்பரீட்சை

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நாளை ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

ஆக்லாந்து,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எதிர்கொள்கிறது.

மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகளை வரிசையாக துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரைஇறுதியை உறுதி செய்து விடும். மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் சரண் அடைந்தது. 3-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய இந்தியா முந்தைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது.

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கில் சொதப்புவது (4 ஆட்டங்களில் 46 ரன்கள்) பின்னடைவாக உள்ளது. முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும். இதில் தோல்வி அடைந்தால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகி விடும் என்பதால் களத்தில் முழு உத்வேகத்துடன் மல்லுகட்டுவார்கள் என்று நம்பலாம். மொத்தத்தில் வீறுநடை போட்டு வரும் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டு இந்தியா வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.