கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெஹிதி ஹசன் களமிறங்குவாரா ?

அடுத்த போட்டியில் தவறுகளைச் சரிசெய்து வெற்றிபெற வங்கதேச அணி தயாராகி வருகிறது.

துபாய்,

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவார் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காய்ச்சல் காரணமாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் மெஹிதி விளையாடவில்லை. அந்தப் போட்டியில் வங்கதேச அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து, அக்டோபர் 19ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்ற பயிற்சியில் மெஹிதி மீண்டும் பங்கேற்றார்.

இருப்பினும், அவர் இன்னும் முழுமையான உடற்தகுதியைப் பெறவில்லை என்பதால், மேலும் ஓய்வு எடுத்த பிறகு அக்டோபர் 21ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா என்பது முடிவு செய்யப்படும்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வியைப் பற்றி பேசிய பயிற்சியாளர் சிம்மன்ஸ், வங்கதேச அணி மோசமாக விளையாடவில்லை என்றும், ஒரு மோசமான நாளால் தோல்வி ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கிடைத்தபோதும், 50 ஓவர்களையும் முழுமையாக விளையாட வேண்டும் என்ற சூழ்நிலை புரிதல் இல்லாததால் அணி தோல்வியைச் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டார். அடுத்த போட்டியில் இந்தத் தவறுகளைச் சரிசெய்து வெற்றிபெற வங்கதேச அணி தயாராகி வருகிறது.

SCROLL FOR NEXT