கிரிக்கெட்

வெற்றிப்பாதைக்கு திரும்புமா மும்பை அணி: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோத உள்ளன.

கவுகாத்தி,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் (சென்னை, குஜராத்) வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 221 ரன் இலக்கை சர்வ சாதாரணமாக விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது. ஆனால் டெல்லிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 162 ரன் மட்டுமே எடுத்த மும்பை அணி, தோல்வி அடைந்தது.

இப்போது வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் உள்ள மும்பை அணி இன்று களமிறங்க உள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் ஆடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உடல்தகுதியை எட்டி விட்டார். அவர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தார்.

இந்த இரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் மும்பையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் :-

மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப் டன்), ரூதர்போர்டு, மிட்செல் சான்ட்னெர், நமன் திர், பும்ரா, ஷர்துல் தாக்குர், டிரென்ட் பவுல்ட் அல்லது கார் பின் பாஷ் அல்லது தீபக் சாஹர், மயங்க் மார்கண்டே.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), ஹெட்மயர், டோன வன் பெரேரா, ரவீந்திர ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ரவி பிஷ்னோய்.