தர்மசாலா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி (குஜராத், சென்னை, ஐதராபாத், மும்பை, லக்னோ, டெல்லி அணிகளுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிராக), 5 தோல்வியுடன் (ராஜஸ்தான், குஜராத், ஐதராபாத், டெல்லி, மும்பை அணிகளுக்கு எதிராக) 13 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வி பக்கமே போகாத அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்று துவண்டு போய் இருக்கிறது.
இந்த சீசனில் 265 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்த அந்த அணி பந்து வீச்சு பலவீனம் காரணமாக 7 முறை 200 ரன்களுக்கு மேலாக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது. பந்து வீச்சு பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரிவில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் அந்த அணி எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் ஜெயித்தால் தான் 'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்க முடியும்.
பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி (ஐதராபாத், சென்னை, 2 முறை மும்பை, லக்னோ, குஜராத், டெல்லி, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) 4 தோல்வி கண்டு (ராஜஸ்தான், டெல்லி, குஜராத், லக்னோ அணிகளுக்கு எதிராக) 16 புள்ளிகள் குவித்துள்ளது. அந்த அணி தனது எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.
பெங்களூரு அணி உத்வேகத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைய தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க பஞ்சாப் அணி கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் 37 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் பெங்களூருவும், 18-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.
பஞ்சாப்:
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கனோலி, ஸ்ரே யாஸ் அய்யர் (கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்கே, ஷசாங் சிங், அஸ்மத் துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், விஷ்ணு வினோத், சேவியர் பார் லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்,
பெங்களூரு:
ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, வெங்கடேஷ் அய்யர், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார். ராசிக் சலாம், ஹேசில்வுட், ஜேக்கப் டப்பி.