புதுடெல்லி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாட தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும்போது, போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பு, அதிக ரன்களை குவிப்பவராக அபிஷேக் சர்மா இருப்பார் என தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை. எனினும், அவருக்கு தொடர்ந்து நான் ஆதரவு தெரிவிக்கிறேன் என்றார். மிக முக்கியம் வாய்ந்த அரையிறுதி போட்டியில் அபிஷேக் சர்மா ஜொலிப்பார் என்று நான் உணருகிறேன் என அவர் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை பாண்டிங் வெளிப்படுத்தி உள்ளார்.
டி20 கிரிக்கெட் தர வரிசையில் நம்பர் ஒன் இடம் வகிக்கும் அபிஷேக், போட்டி தொடரில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கலப்பட உணவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மெதுவாக மீண்டு வந்த அவர், சூப்பர் 8-ல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக ரன் சேர்ப்பில் ஈடுபட்டார்.
அதுவும் 12 பந்துகளில் 15 ரன்களாக இருந்தது. கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில், 30 பந்துகளில் 55 ரன்களை எடுத்தது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எனினும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 10 ரன்கள் என மறுபடியும் சொற்ப ரன்களை எடுத்து மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மொத்தம் 6 போட்டிகளில் அவர் 80 ரன்கள் எடுத்துள்ளார். அவற்றில் 3 டக் அவுட்டுகளும் அடங்கும்.
ஆனால், அரையிறுதி போட்டியில் திறமையாக விளையாடினால் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்ற பெருமையை பெறும் வாய்ப்பு அவருக்காக காத்திருக்கிறது.