மும்பை,
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது ஒருநாள் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடியபோது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார்.
இந்த தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் ஜூலை 14 அன்று பர்மிங்காமில் தொடங்குகிறது.
தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் விராட் கோலி, பெங்களூரில் உள்ள பிசிசிஐ செயல்பாட்டு மையத்தில் விராட் கோலி தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது காயம் மிக வேகமாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அங்கு அவரது உடற்தகுதி குறித்து இறுதி கட்ட பரிசோதனை நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றவுடன், அவர் மீண்டும் தேசிய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்திலிருந்து மீண்டு வரும் இந்திய வீரர் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரின் மூலம் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.