சென்னை,
டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒரு முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார். அவர் பேசுகையில், ‘எல்லோரும் தென் ஆப்பிரிக்காவை ‘சோக்கர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், நியூசிலாந்து எங்களைவிட அதிக இறுதிப்போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். அதனால், இந்த முறையாவது கோப்பையை வெல்லுங்கள். இல்லையேனில் நீங்கதான் ’சோக்கர்ஸ்’ ’ என்று நகைச்சுவையாக கூறினார்.
மேலும், “எனக்கு நியூசிலாந்தை மிகவும் பிடிக்கும். அவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தியாவை அகமதாபாத்தில் தோற்கடிப்பது மிகவும் கடினம். இந்தியா மிகப்பெரிய தவறு செய்தால்தான் அது சாத்தியம்,” என்று தெரிவித்தார்.
இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும், தாயக மண்ணில் கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் வரலாறு படைக்கும்.