சென்னை,
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை இந்தியா சந்திக்கிறது.
8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 7 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் ஹாங்காங்கையும் வீழ்த்தி அரையிறுதியை எட்டியது.
இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும். 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 3, 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.