கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

இந்திய அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முந்தைய இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கைப்பற்றியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் அதிரடி காட்டியது. அந்த அணியில் அலிசா ஹீலி, பெத் மூனி இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர்.

அலிசா ஹீலி 158 ரன்களும், பெத் மூனி 106 ரன்களும் எடுத்தனர்.இதனால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்குஆஸ்திரேலிய அணி 409 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

மந்தனா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றவர்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தும், அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். சினே ராணா அதிகபட்சமாக 44 ரன்களும், ஜெமினா 42 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 185 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அலானா கிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.