Image Courtesy: @ACCMedia1  
கிரிக்கெட்

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா

முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

கோலாலம்பூர்,

முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

அதன்படி இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக மானுடி நாணயக்கார 33 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 99 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 14.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 102 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் திரிஷா 32 ரன், காமிலினி 28 ரன் எடுத்தனர். இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் 3 ஆட்டங்களில் 2 வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி இறுதிப்போட்டியில் வங்களதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.