மும்பை,
மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
5-வது மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027-ம் ஆண்டுக்கான டபில்யூ.பி.எல். போட்டிகள் ஜனவரி 14-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் வதோதரா மற்றும் மும்பை ஆகிய 2 நகரங்களில் நடைபெறுகின்றன. இரு மைதானங்களிலும் தலா 11 போட்டிகள் என மொத்தம் 22 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஜனவரி 14-ந்தேதி வதோதராவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து ஜனவரி 24-ந்தேதி வரை 11 போட்டிகள் வதோதராவில் நடைபெறும்.
இதையடுத்து, ஜனவரி 26-ந்தேதி முதல் எஞ்சிய 11 போட்டிகளும் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 3-ந்தேதி நிறைவடைகின்றன. லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
புள்ளிப்பட்டியலில் 2-வது மற்றும் 3-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி பிப்ரவரி 7-ந்தேதி நடைபெறுகிறது.