கிரிக்கெட்

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணியில் இணைந்த அமெரிக்க வீராங்கனை

ரூ.10 லட்சம் ஒப்பந்தத் தொகையிலேயே அவர் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

மும்பை,

அமெரிக்காவின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான தாரா நோரிஸ், 2027 மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியிலிருந்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.10 லட்சம் ஒப்பந்தத் தொகையிலேயே அவர் மும்பை அணியில் இணைந்துள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய தாரா நோரிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அந்தப் போட்டியில் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஆட்டநாயகி விருதையும் நோரிஸ் வென்றார். மேலும், WPL ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அசோசியேட் நாட்டைச் சேர்ந்த வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

2023ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடிய நோரிஸ், ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 2026ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணியால் ரூ.10 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். இருப்பினும், அமெரிக்க அணிக்காக மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கத் தேர்வானதால், அந்த சீசனில் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாட முடியவில்லை. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள அவர், தனது வேகப்பந்து வீச்சின் மூலம் அணியின் பந்துவீச்சுப் பிரிவை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

SCROLL FOR NEXT