கிரிக்கெட்

பெண்கள் டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

முதலாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

ராய்ப்பூர்,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டனாக ஸ்மிருதி மந்தனா

ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளும் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் இருதரப்புத் தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய மகளிர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியதைத் தொடர்ந்து, புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டார். அவர் முழுநேர கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு விளையாடும் முதல் தொடர் என்பதால் இந்தத் தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

114 ரன்கள்

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஷார்னே மேயர்ஸ் 33 பந்துகளில் 43 ரன்களும், கெலிஸ் ந்த்லோவு 44 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். மோடெஸ்டர் முப்பாசிக்வா 16 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக நந்தனி சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதிர்ச்சி

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணியின் சார்பில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஸ்மிருதி மந்தனா 9 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அனுஷ்கா சர்மா 4 ரன்களும், ஹர்மன் பிரீத் கவுர் 1 ரன்னும், ஷபாலி வர்மா 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இதனையடுத்து நிக்கி பிரசாத்துடன் தீப்தி சர்மா இணைந்தார். இந்த ஜோடி தங்களது சிறபான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. இந்த ஜோடியில் தீப்தி சர்மா 49 (37) ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 7 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

இறுதியில் நிக்கி பிரசாத் 39 (35) ரன்களும், அருந்ததி ரெட்டி 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் சார்பில் அதிகபட்சமாக வாங்சுரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT